
சென்னை: சென்னையில் கொரோனாவினால் பாதிப்படைந்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலனளிக்கிறது என்பதால் விரைவில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இச்சிகிச்சை தொடங்கவுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்படைந்துவரும் நிலையில், அவர்களுக்கு என்ன முறைப்படி சிகிச்சை அளிக்கலாம் என சுகாதாரத்துறை தொடர்ந்து ஆலோசித்துவருகிறது. மேலும் மத்திய சுகாதாரத்துறை தரும் அறிவுரையின் படி சில மருந்துகளையும், நல்ல உணவுமுறைகளையும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில், 6 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். அதோடு 13 பேரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துவருவதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் சில தினங்களில் பிளாஸ்மா சிகிச்சை முறை தொடங்கவுள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா நோயாளிகள் பலன் அடைவார்கள் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.