கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், வேலை, உணவின்றி தவித்து வந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான தூரம் பயணம் செய்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அவர்கள் ஊர் திரும்ப மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கினாலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டிய கூடுதல் பொறுப்பு மாநில அரசுக்கு ஏற்பட்டது.
இந்த சூழலில் தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்காக ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டதாக நேற்று முன் தினம் அறிவித்தார்.

அதன்படி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ கரீப் கல்யான் ரோஜ்கர் அபியான்’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “ ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், நலனுக்காவும் இன்று ஒரு புதிய தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தினம். என் தொழிலாளர் நண்பர்களே, உங்கள் உணர்வுகளை தேவைகளையும் நாடு புரிந்துகொண்டுள்ளது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இன்று பீகாரில் ‘ கரீப் கல்யான் ரோஜ்கர் அபியான்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே வேலை கிடைக்கும். இதுவரை உங்கள் திறமைகளை நகரங்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தி நீங்கள், இனி கிராமங்களுக்காக வேலை செய்யப் போகிறீர்கள்” என்று தெரிவித்தார்.
இந்த ‘ கரீப் கல்யான் ரோஜ்கர் அபியான்’ திட்டம் பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ஒடிஷா, ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில், ஆண்டின் 125 நாட்களுக்கு செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.