
இந்தியாவின் கொரோனா நோயின் தீவிரம் உச்சத்தினை எட்டிவரும் நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் இன்றும் நாளையும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடங்கிய ஊரடங்கு தற்போது 5 வது முறையாக போடப்பட்டு அமலில் உள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னமும் கொரோனாவின் தீவிரம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற பல மாநிலங்களில் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தான் கொரொனா பரவலை தடுக்க அடுத்து என்ன நடவடிக்கை தேவை? ஊரடங்கு கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா? இழந்த பொருளாதாரத்தை எப்படி மீட்பது? என்பது குறித்து மாநிலமுதல்வர்களுடன் இன்றும் நாளையும் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்துகிறார்.
முதற்கட்டமாக இன்று பஞ்சாப், அசாம், கேரளா, உத்தரகாண்ட் மற்றும் வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனைத்தொடர்ந்து நாளை மதியம் 3 மணிக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சியின் வாயிலாக இன்றும் நாளையும் மோடி ஆலோசனை நடத்தி முடிந்த பின்பு அடுத்தக்கட்டமாக நாடு முழுவதும் என்ன முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.