கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து இன்று பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. நொய் தொற்றை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக, 11,548 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08.993-ஆக அதிகரித்துள்ளது. எனவே உலகளவில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து இன்று பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை ஹர்ஷ்வர்தன், பிரதமரின் முதன்மை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக, மருத்துவ வசதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளின் தேவைகள் போன்ற சிகிச்சை வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுடன் மோடிக் கேட்டுக் கொண்டார்.
அவசரக் காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கவும் மத்திய சுகாதரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மாநில சுகாதர துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து போதிய சிகிச்சை
அவசர கால திட்டங்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் பருவமழைக் காலம் தொடங்கி உள்ளதால், முறையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்கவும் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர், முதல்வருடன் அமித்ஷா மற்றும் ஹர்ஷவர்தன் அவசர ஆலோசனை நடத்தவும் மோடி அறிவுறுத்தினார்.