
திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அங்குள்ள இருட்டுக்கடை அல்வா தான். நெல்லையப்பர் கோவில் வாயிலின் முன்பாக அமைந்துள்ள சிறிய கடை தான் நூற்றாண்டுகளை கடந்தும் இன்னும் சிறப்புடன் இயங்கிவருகிறது. இக்கடையின் உரிமையாளரான ஹரிசிங், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவின் காரணமாக, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்தவுடன் மிகுந்த மனஉளைச்சலுக்கு அவர் ஆளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் ஹரிசிங் இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடை உரிமையாளர் ஹரிசிங், தனக்கு கொரோனா இருப்பது பற்றி தெரியவந்ததும், தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்