ஹிமாச்சல் பிரதேசத்தில், கர்ப்பிணி பசுவின் வாயில் வெடிப்பொருள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்துட்டா என்ற பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்ப்பிணி பசுமாடு ஒன்று, அங்குள்ள வயலில் புல் மேய்ந்து கொண்டிருந்த போது, அதிலிருந்து வெடிபொருளையும் மென்றுள்ளது. அப்போது அந்த வெடி மாட்டின் வாயில் வெடித்ததால், அதன் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர் குர்தியல் சிங் இந்த வீடியோவை சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தாடையில் ஏற்பட்டுள்ள பலத்த காயம் காரணமாக, மாட்டினால் அடுத்த சில நாட்கள் உண்ண முடியாது எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தனது அண்டை வீட்டில் வசிக்கும் நந்த்லால் தான் வேண்டுமென்றே மாட்டை காயப்படுத்தியதாகவும் அவர் அந்த வீடியோவில் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு நந்த்லால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆன நிலையில், அப்பகுதி போலீசார் விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று, வெடிப்பொருள் நிறைந்த அன்னாசி பழத்தை உண்ட பின்பு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கர்ப்பிணி பசு ஒன்றின் வாயில் வெடிப்பொருள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.