கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த மாதம் பசியால் சுற்றித் திரிந்த யானைக்கு, அன்னாசி பழத்திற்குள் வெடியை வைத்து அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கொடுத்துள்ளனர். யானையின் வாயில் இந்த வெடி வெடித்ததால், அதற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த யானை, அங்குள்ள வெள்ளியாறு நீருக்குள்ளேயே நின்றுள்ளது. எனினும் இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் சென்று யானையை மீட்பதற்குள் அது கடந்த 27-ம் தேதி உயிரிழந்துவிட்டது. உடல்கூறு ஆய்வின் போதுதான் அது கர்ப்பிணி யானை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
யானை கொல்லப்பட்டது குறித்து பிரபலங்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் இணையதளத்தில் தங்கள் கண்டனங்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த சம்பவம் தொட்ர்பாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தாஅர். மேலும் குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் இன்று ஒருவரை கைது செய்துள்ளதாக கேரள வனத்துறை தெரிவித்துள்ளது. 40 வயதான அந்த நபர் வெடிப்பொருட்களை சப்ளை செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருவதாக பாலகாடு தலைமை காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.