
தூத்துக்குடி: மக்களின் வசதிக்காக தூத்துக்குடியில் இலவசமாக பேருந்துகளை இயக்கும் உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டநிலையில் வேலையின்றி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தி பல்வேறு தேவைகளுக்காக பணியிடங்களுக்கு சென்றுவருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு உதவிபுரியும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகள் இலவசமாக மக்களை ஏற்றி சென்றுவருகிறது. முதற்கட்டமாக தற்போது கோவில்பட்டி – குருவிக்குளம் திருநெல்வேலி கழுகுமலை ஆகிய இரு வழித்தளங்கில் பேருந்து சேவை செயல்பட்டுவருகிறது. இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் இலவசமாக பேருந்து சேவை இயக்கப்படுவது மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.மேலும் இப்பணியினை மேற்கொள்ளும் தனியார் பேருந்து உரிமையாளருக்கு அப்பகுதி மக்கள் மிகுந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துவருகின்றனர்.