
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் பல தனியார் பள்ளிகள் லாபநோக்கில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை தொடங்கியிருப்பது கல்வியாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தான் தமிழக அரசு பள்ளிகள் அனைத்தையும் மூட வலியுறுத்தி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது.இதோடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தமுடியாமல் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்பினை வெளியிட்டது தமிழக அரசு.

இந்நிலையில் சென்னை,கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் 11 ஆம்வகுப்பு மாணவர் சேர்க்கையினை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கேற்றால் போல் தமிழக அரசும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டதால் இந்த கல்வியாண்டில் மதிப்பெண் முக்கியத்துவம் பெறவில்லை. இதன் காரணமாக வாட்ஸ் அப் மற்றும் ஆன்லைனில் மாணவர் சேர்க்கையினை தனியார் பள்ளிகள் நடத்திவருகின்றனர்.

மேலும் தற்போது மதிப்பெண்கள் இல்லாத காரணத்தினால் நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வின் மூலம் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. மாணவர்களின் உயிரினை கவனத்தில் கொள்ளாமல் லாப நோக்கில் மட்டும் தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கை கல்வியாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.