புதுச்சேரி முதல்வருக்கு 2வது முறை நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதல்வர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் எனவும், யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்தது.

இந்த சூழலில் நேற்று 2-வது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரது வீடு, அலுவலகம், பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதேபோல் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 388 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 221 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், 10 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.