புதுச்சேரியில் கொரானா தொற்றால் உயிரிழந்தவரின் உடலுக்கு எந்தவித மரியாதையும் வழங்கப்படாமல் குப்பையை போல் குழிக்குள் தூக்கி வீசப்படும் சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 44 வயதான அந்த நபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது மூத்த மகன் உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவரது மனைவி இளைய மகனுடன் புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மனைவி மற்றும் மகனை பார்க்க வந்தவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவரது உடலை உறவினர்கள் வாங்க முன்வராததால் அவரது உடல் கோபாலன் கடை சுடுகாட்டில் 15 அடி ஆழம் பள்ளம் தோண்டி கிருமிநாசினி தெளித்து புதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுழலில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சடலத்தை ஆம்புலன்சில் இருந்து இறக்கிய அதிகாரிகள், உடலை அப்படியே குழிக்குள் குப்பையை கொட்டுவதை போல தூக்கி வீசுவிட்டு மணலை கொட்டி புதைத்துள்ளனர்.
கொரோனா பீதி காரணமாக உயிரிழந்தவரின் சடலத்திற்கு எந்த மரியாதையும் இன்றி, அதனை அவமதிக்கும் வகையில் குப்பையை போன்று தூக்கி வீசும் இந்த நிகழ்வு பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.