கடந்த 2000 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய புயலுக்கு பிறகு மீண்டும் அதே பாதையில் பயணிக்கிறது இந்த புரவி புயல். திருகோணமலை வழியாக தூத்துக்குடியில் புயல் கரையை கடக்கிறது. இது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போன்ற புயல் கரையை கடக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இலங்கை நாட்டில் இருந்து இந்திய நாட்டின் தமிழகத்தில் ஒரு புயல் கரையை கடப்பது மிக அரிதான ஒன்று. ஏற்கனவே வந்த 2000ஆம் ஆண்டின் புயல் காலகட்டத்தில் இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகலுக்கும் இலங்கை அரசுக்கும் யுத்தம் அதிதீவிரத்தில் இருந்தது. அந்த வேளையில் விடுதலை புலிகள் கைகள் ஓங்கி இருந்தது.

அப்போது உருவான புயல் திருக்கோணமலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த புயல் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் கரையை கடந்ததால் அங்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. இப்போதைய புரேவி புயலும் கிட்டத்தட்ட 2000-ம் ஆண்டு புயலின் பாதையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது என்பதை முந்தைய செயற்கைகோள் படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்கிறது.
இலங்கையின் திருகோணமலையில் 2000-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்த புயல் தாக்கி சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மீட்பு பணிகளில் இறங்கியது. அப்போது யுத்த களத்தில் கை ஓங்கி நின்ற விடுதலைப் புலிகள் ஒருதலைபட்சமாகவே போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இதனை இலங்கை அரசு நிராகரித்தது. பின்னர் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் அமைதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக வரலாற்றுச் சிறப்புமிக்க 2002-ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.