புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிஸ்கெட்டுகளை தூக்கி எறிந்த மூத்த ரயில்வே அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரோஸாபாத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஷ்ரமிக் சிறப்பு ரயிலில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. ரயில்வே மூத்த அதிகாரி டி.கே தீக்ஷித் தலைமையிலான அதிகாரிகள் அவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வழங்கினர்.
சிறப்பு ரயிலில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களை கிண்டல் செய்தும், கூச்சலிட்டுக் கொண்டும் அவர்கள் மீது பிஸ்கெட்டுகளை தூக்கி எறிந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ, உள்ளூர் ரயில்வே அதிகாரிகளின் வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிரப்பட்டதன் மூலம், அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதனையடுத்து மூத்த ரயில்வே அதிகாரி தீக்ஷித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும் மற்ற அதிகாரிகள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக வேலை, பணம், உணவின்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தும், சைக்கிள் மூலமும் செல்லத் தொடங்கினர். இதனால் பலர் தங்கள் வீட்டை அடையும் முன்பே பசி, விபத்து உள்ளிட்ட காரணங்களாக உயிரிழந்துள்ளனர்.

எனினும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்தது. ஆனால் உரிய வசதிகள் இல்லை என்று பலர் குற்றம்சாட்டினர். உணவு, தண்ணீர் வழங்கப்படாததால் பலர் ரயில் நிலையத்திலேயே உயிரிழக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.