சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.

சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாக இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்பு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளமான ட்விட்டரிலும் #JusticeForJeyarajAndFenix போன்ற ஹேஷ்டாக் கடந்த 5 நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக தந்தை, மகன் உயிரிழந்ததாக கூறிவந்த முதல்வர், சாத்தான்குளம் வழக்கு, சிபிஐக்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று, வழக்கு சிபிஐக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு ரஜினி பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ரஜினி ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதேபோல் சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜெயராஜின் மனைவி, மகளிடம் கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.