சாத்தான்குளம் விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த் “ தந்தையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சு அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது..” என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். மேலும் #சத்தியமாவிடவேகூடாது என்ற ஹேஷ்டாகையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவே உலுக்கியது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், ஜெயராஜ் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் ரஜினி தற்போது இதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார்.
முன்னதாக போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற மாஜிஸ்திரேட்டையே காவலர்கள் இழிவாக பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே சிபிஐ விசாரணை ஏற்பதற்குள் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.