1996-ம் ஆண்டு முதலே தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று கூறி வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அவரின் வார்த்தையை நம்பிய அவரது ரசிகர்கள் அவரது அரசியல் அறிவிப்பை கேட்கவே பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.

ஒருவழியாக 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. போருக்கு தயாராகுங்கள் என்றும், சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் கூறிவந்தார். எனவே நிச்சயம் 2021 தேர்தலுக்குள் அரசியல் கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்களிடையே அரசியல் புரட்சி வெடிக்கட்டும் அப்போ அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டார். இதனால் அவர் அரசியல் கட்சி தொடங்குவது மீண்டும் கேள்விக்குறியானது..
கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மக்களிடையே அரசியல் புரட்சி வெடிக்கட்டும் என்று கூறிவிட்டார். அதன்பிறகு கொரோனா வந்துவிட்டதால் ரஜினி இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. எனினும் ரஜினி மூலம் தமிழகத்தில் கால்பதிக்க தொடர்ந்து முயற்சித்து வரும் பாஜக, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பியது. இதற்காக ரஜினி பற்றிய அறிக்கை ஒன்று அமித்ஷாவிற்கு அனுப்பப்பட்டதாம்.. அதாவது 1996-ல் ரஜினிக்கு இருந்த ஆதரவு இப்போதும் உள்ளதா, அரசியல் களத்தில் ரஜினி ஏற்படுத்திய தாக்கம் போன்ற பல விஷயங்கள் அதில் இடம்பெற்றிருந்ததாம்..

அதனடிப்படையில், ரஜினிக்கு மக்கள் ஆதரவு எதிர்பார்த்த அளவு இல்லை என்று அந்த அறிக்கையில் இருந்ததாம்.. ஆனாலும் அதை பொருட்படுத்தாத அமித்ஷா, சென்னை வந்ததே ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு ஒ.கே சொல்ல வைக்க தானாம்.. ஆனால் எதிர்பார்த்த படி, அமித்ஷா – ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை… ஆனாலும் அமித்ஷா – குருமூர்த்தி சந்திப்பு நீண்ட நேரம் நடைபெற்றது. அதில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து குருமூர்த்தி அமித்ஷாவிடம் கூறியதாக தெரிகிறது.
இதுஒருபுறமிருக்க, ரஜினியின் அரசியல் வருகை என்பது உண்மையிலேயே திமுக – அதிமுகவுக்கு லேசான பீதியை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.. ரஜினி கட்சியை ஆரம்பித்தால், வாக்குகள் சிதறுமே என்பது அதிமுகவின் கவலைப்படும் நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால், எப்படியாவது இம்முறையாவதுஆட்சியமைக்க வேண்டி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை திமுக ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த பாஜக ரஜினியை வைத்து காய் நகர்த்த திட்டமிட்டது. ரஜினியின் ஆன்மீக அரசியல் மூலம் திராவிட கட்சிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து இந்துக்களின் வாக்குகளை வெல்ல பாஜக நினைத்தது. இதன் காரணமாக ரஜினியை அரசியல் களத்துக்கு கொண்டுவருவதில், அமித்ஷா தான் தீவிரமாக இருந்தார்.. அதற்காகவே அவர் நேரடியாகவே அழைப்பும் விடுத்தார்.. ரஜினியை பயன்படுத்தினால், பாஜகவின் செல்வாக்கு உயரும் என்று கணக்கு போட்டு வந்த நிலையில், இப்போது, ரஜினி அரசியல் அறிவிப்பு பாஜகவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை அமித்ஷா உறுதி செய்த நிலையில், ரஜினியின் கட்சியும் இந்த கூட்டணியில் இணையுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அல்லது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, ரஜினியுடன் கூட்டணி வைக்குமா..? இல்லையெனில், பாஜக, பாமக, அ.ம.முக, ம.நீ.ம, போன்றக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து 3-வது அணி அமையுமா..? 2021 தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற பாஜகவின் கனவு பலிக்குமா..? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ரஜினி அரசியல் கட்சியை தொடங்கினால் மட்டுமே இதற்கான பதில் கிடைக்கும்..