இந்திய – சீன எல்லைப் பிரச்சனையை தீர்க்க இருநாடுகளுக்கு உதவ தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ இது மிகக் கடினமான நேரம். நாங்கள் இந்தியாவோடு பேசிக் கொண்டிருக்கிறோம். சீனாவோடும் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இருநாடுகளின் எல்லைப் பிரச்சனையை தீர்க்க அமெரிக்க உதவ தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த வார தொடக்கத்தில் லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 35 க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் ஊடுருவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ர்ம்ப் நிர்வாகம், இந்தியா பின்னால் அணி சேர்ந்துள்ளது.
மேலும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மற்ற நாடுகள் போராடி வரும் நிலையில், இந்தியாவுடனான எல்லை மோதலை சீனா உருவாக்குவதாகவும் அமெரிக்க குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.