இந்திய – சீன எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், நியாயமான முறையில் பிரச்சனையை தீர்க்க இரு நாடுகளும் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், நேற்று முன் தினம் இரவு இந்திய இராணுவத்திற்கும் சீன வீரர்களுக்கும் இடையில் மிக மோசமான மோதல் நடைபெற்றது. இரு நாட்டு எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே இந்தியா – சீனா இடையே நீடித்து வந்த பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளின் எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து இருநாட்டு வெளியுவு அமைச்சர்களும் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாய் யி-ஐ இன்று தொடர்பு கொண்டு பேசியதக கூறப்படுகிறது. எல்லை மோதலை நியாயமான முறையில் பேசி தீர்க்கவும், தங்கள் நாட்டு படைகள் விரைவிலேயே திரும்பப் பெற இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
எல்லை மோதலுக்கு காரணமானவர்களை இந்தியா கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சீன அமைச்சர் வாங் யி இந்தியாவிடம் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம், எல்லை விவகாரத்தை தீர்க்க தொடர்ந்து முயற்சி செய்வோம் எனவும், மோதல் போக்கை தாங்கள் விரும்பவில்லை என்றும் சீன செய்தித் தொடர்பாளர் கூறியிருந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த பேச்சுவாரத்தை நடைபெற்றுள்ளது.

முன்னதாக இன்று மதியம் மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மோடி, இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று தெரிவித்தார். இந்தியா அமைதியையே விரும்புவதாக கூறிய அவர், இந்தியாவை யாராவது தூண்டினால், எந்த சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.