பீலா ராஜேஷின் பணியிட மாற்றத்திற்கான பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 28,000 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. எனவே மகாராஷ்டிராவிற்கு அடுத்த படியாக, கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்திலேயே உள்ளது.
இதுஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் கொரோனா பரவத் தொடங்கிய போது, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான், தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்து விவரித்தார். ஒரு கட்டத்தில் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்திப்பது நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், கொரோனா தொடர்பான விவரங்களை பீலா ராஜேஷ் தான் செய்தியாளர்களை சந்தித்து வழங்கி வந்தார்.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தார் பீலா ராஜேஷ். ஆனால் அதன்பிறகு பீலா ராஜேஷின் செய்தியாளர் சந்திப்பும் நிறுத்தப்பட்டது. சுதாதாரத் துறை சார்பில் அறிக்கைகள் மட்டும் வெளியான நிலையில், அமைச்சர் சில நேரங்களில் செய்தியாளர்களை சந்திப்பார்.

இந்த நிலையில் தான், வருவாய் நிர்வாகத் துறை ஆணையராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன், கடந்த மாதம், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சுகாதாரத் துறை செயலாளர் இருக்கும் போது, எதற்கு சிறப்பு அதிகாரி நியமனம் என்று கேள்வி எழுந்தது.
இந்த சூழலில் தான் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்பு சுகாதாரத் துறை செயலாளராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், சென்னையில் கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதில், சென்னை மாநகராட்சிக்கும், சுகாதாரத் துறைக்கும் இடையே இருந்த பனிப்போர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் சென்னையில் 400-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதுமட்டுமின்றி, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த 20 பேரின் விவரங்களை சுகாதாரத் துறைக்கு சென்னை மாநகராட்சி வழங்கவில்லை என்ற புகாரும் எழுந்தது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், கொரோனா உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர் “ முன்பு அரசு மருத்துவமனைகளில் மட்டும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனால் சுகாதாரத் துறைக்கு இறப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. விடுபட்டுள்ள இறப்பு விவரங்கள் சுகாதார துறை பதிவில் ஏற்றப்படும், இதற்காக ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
பீலா ராஜேஷின் இந்த பேட்டி சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை குறை கூறும் விதமாக அமைந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் முதல்வரிடம் பீலா ராஜேஷ் குறித்து புகார் அளித்ததாகவும் தெரிகிறது.

இதனிடையே, சிறப்புக் குழு அமைக்கப்படுவது குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் பீலா ஆலோசனை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவே முதல்வர் அலுவலகம் – சுகாதாரத் துறை இடையே மோதல் வெடிக்க காரணமாகவும் அமைந்தது. பீலா ராஜேஷின் பணியிட மாற்றத்திற்கு இந்த பேட்டியும் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.