வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கிராமப்புற இளைஞர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன், தமிழக அரசு 2025-2026 ஆம் ஆண்டுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘முதல்வரின் உழவர் நல சேவை மைய திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண் துறை சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டம் முழுவதும் இந்தப் புதிய திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளாண் பொறியியல் சார்ந்த பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள், இந்த மையங்களை எளிதாகத் தொடங்க முடியும். இந்த மையங்கள் மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கு அத்தியாவசியத் தேவைகளான தரமான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், பயிர்களில் ஏற்படும் நோய், விளைச்சலின்மை அல்லது பூச்சித் தாக்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆலோசனை வழங்குதல், விளைச்சலை உயர்த்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்கான பயிற்சிகள் ஆகியவையும் இந்த மையங்களில் வழங்கப்படும்.
மானியம் பெறுவது எப்படி..?
இந்த ‘உழவர் நல சேவை மையங்கள்’ தொடங்க மொத்தமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முதலீடு தேவைப்படுகிறது. இதில், முதலீட்டுத் தொகையில் 30 சதவீதம் வரை அரசு மானியமாக வழங்குகிறது. 300 சதுர அடியில் மையம் அமைக்கும் இளைஞர்களுக்கு ரூ.3 லட்சமும், 600 சதுர அடியில் மையம் அமைக்கும் இளைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சமும் மானியமாக வழங்கப்படும். இந்த நிதி உதவி, தொழில் தொடங்க விரும்பும் கிராமப்புற இளைஞர்களுக்குப் பெரிய ஊக்கமளிக்கும்.
விண்ணப்பிக்க தகுதிகள் என்ன..?
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் அல்லது வேளாண்மை தொடர்பான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றை விற்பனை செய்யத் தேவையான உரிமங்களைப் பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியில் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.
விண்ணப்பிப்பது எப்படி..?
இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள், முதலில் தாங்கள் விரும்பும் வங்கியில் தங்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். கடன் ஒப்புதல் கிடைத்தவுடன், agrisnet என்ற தமிழக அரசின் இணையதளத்தில் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, மானிய உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம். உரிமங்கள் இல்லாதவர்கள், அதே இணையதளம் மூலம் அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த திட்டம், கிராமப்புற இளைஞர்களின் தொழில் கனவுகளுக்குப் பெரிய உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : ராமநாதபுரம் அரசு விடுதியில் பயங்கரம்..!! 8ஆம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து சித்திரவதை..!!



