சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கடந்த சில நாட்களாக பிற மாவட்டங்களிலும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய்த்தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, பொதுநிகழ்ச்சிகளில் பங்குபெற பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, திருமண நிகழ்ச்சிகளுக்கு 20 பேருக்கு மிகாமலும், துக்க நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் மிகாமலும் பங்கேற்க அரசு வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பண்ணவாடி கிராமத்தில் உடல்நலக்குறைவால் செல்வம் என்ற இளைஞர் கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தார்.. இந்த இளைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்றதால் 2 மருத்துவர்கள் உட்பட 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.