இந்திய சீன எல்லைப்பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் சீனா கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் 15ம் தேதி இரவு நடந்த இந்திய சீன எல்லைப்போரில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். கல்வான் பகுதியில் நடந்தேறிய இந்த சம்பத்தை கண்டித்து சீன மீது வெறுப்பு வெடித்தது. உலக நாடுகள் பலவும் இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றது. மேலும் ரஷ்யாவுடன் இந்தியா ஆயுத ஒப்பந்தமும் செய்துள்ளது. அமெரிக்க படை வீரர்களும் இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்க போவதாக செய்திகள் வெளியானது.
இதற்கு சீனா தரப்பில் இந்தியா எல்லை பகுதியில் போடப்பட்டு வரும் சாலை பணியே காரணம் என குற்றம் சாட்டியது. அது இந்தியர்களின் எல்லை என்பதால் இந்த சாலை பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்கு பின் இரு நாடுகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மேக்ஸர் தொழில்நுட்ப நிறுவனம் சில செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இதனை கடந்த மாதம் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பிடுகையில் சீனா அத்துமீறி கட்டிடங்கள் கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இந்திய பகுதிகளில் சீனா பதுங்குக் குழிகள், கூடாரங்கள், ராணுவ தளவாடங்கள் மற்றும் தளவாடங்களுக்கான சேமிப்பு கிடங்குகள் ஆகியவை புதிதாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வீரர்கள் குவிக்கப்பட்டு வந்த நிலையில் உயர்மட்ட குழுக்கள் படை வீரர்களை பின்வாங்க செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபினும் ஜூன் 15 மற்றும் 16ம் தேதிகளில் மோதல் வெடித்தது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த கட்டுமான பணி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது எல்லை கோட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு உள்ளே கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து இந்தியா மற்றும் சீனா தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.