சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சிறையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும் தந்தை, மகன் இருவரின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று நீதிபதிகள் புகழேந்தி, பிரகாஷ் ஆகியோர் அடங்கிய முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்று கூறினர். மேலும் சிபிஐ விசாரணை அதிகாரி புதிதாக வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர்.
மேலும் சாத்தான்குளம் காவல்நிலையம், மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சிபிஐ அதிகாரிகள், சாத்தான்குளம் காவல்நிலையம் சென்று தடங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டனர். அதற்காக தடய அறிவியல் துறையினர் உதவி இயக்குனர் சாத்தான்குளம் செல்ல வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.