சாத்தான்குளம் வழக்கு விசாரணை தீவிரமடையும் நிலையில், அரசு மருத்துவர் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியாவே உலுக்கியது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் அரசு மருத்துவர் வினிலா 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 20-ம் தேதி காலை 11 மணிக்கு, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் வினிலா, அவர்களை சிறையில் அடைக்க தகுதி சான்றிதழ் வழங்கியுள்ளார். அதன்பிறகு தான் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த நிலையில் மருத்துவர் வினிலா 4 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார்.
இந்நிலையில் அந்த விடுப்பை 15 நாட்கள் நீட்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்த வழக்கில் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதில் காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கு மாறான சிசிடிவி காட்சிகள் வெளியானதால், போலீசார் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்துள்ளது தெரியவந்தது. இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே இந்த வழக்கை தாமாக விசாரித்து வரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை, விசாரணையை சிபிஐ ஏற்கும் வரை, தற்காலிகமாக சிபிசிஐடி உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.