சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரண வழக்கை கொலை வழக்காக தலைமறைவாக இருந்த எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஊரடங்கு காலத்தில் நீண்டநேரம் கடையை திறந்திருந்ததாக, ஜூன் 19ல் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவில் விசாரணையின்போது அவர்கள் இருவரும் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளனர். பின்னர் மறுநாள் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அடுத்தடுத்து தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அதிரடியால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து சிபிசிஐடி ஐஜி சங்கரின் நேரடிக் கண்காணிப்பில் அமைக்கப்பட்ட 12 தனிப்படைகள் சாத்தான்குளம் காவல் நிலையம் முதல், ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினர் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை வரை பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். சாத்தான்குளம் பஜாரில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதால் தந்தை மகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து, மர்ம மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 4 பேர் மீது மட்டும் முதற்கட்டமாக கூட்டுச் சதி மற்றும் கொலை ஆகிய 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதல் குற்றவாளியான ரகுகணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து தூத்துக்குடி கோர்ட் உத்தரவிட்டது. வரும் 16ம் தேதி அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மற்றவர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில், நள்ளிரவில், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டனர். அவர்களை இன்று காலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என தெரிகிறது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த தலைமை காவலர் முத்துராஜூம் கைது செய்யப்பட்டார்.