
சாத்தான்குளத்தில் ஊரடங்கினை மீறி கடை நடத்தியதாக தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து, நீதிமன்றத்தின் உத்தரவினை பெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு ஜெயராஜ் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் எதிர்க்கட்சியினர் முதல் சினிமா பிரபலங்கள் வரை இச்சம்பவத்திற்கு தொடர் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் இதுக்குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று , விசாரணை சிபிஐ க்கு மாற்றப்படும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊரடங்கு காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு தர வேண்டாம் என காவல்துறையினருக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் கொரோனாவினால் இறப்பு குறைவாக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதோடு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சேலம் கால்நடை பூங்காவிற்கு ஆயிரத்து 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பூங்கா மூலம் நாட்டின் மாடுகள், கோழிகள், நாய்கள் உள்ளிட்ட உயிரினங்கள் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.