மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை மாதத்திற்கு பிறகும், பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ ஜூலை வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படாது என்று நாங்கள் அறிவித்தோம். ஆனால் ஜூலைக்கு பிறகும் கூட பள்ளிகள் திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும். இந்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகள், பள்ளிக்கட்டணத்தை உயர்த்தக் கூடாது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, பணியாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
பின்னர், மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கியது. இதனால் மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது. கொரோனா நெருக்கடியை ஒரு சிலர் அரசியல் செய்கின்றனர்” என்று தெரிவித்தார்.
இன்றைய நிலவரப்படி மேற்குவங்கத்தில் 8,935 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 3,000 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 415 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மம்தா மேற்கு வங்கத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தார். அதன்படி கடந்த 1-ம் தேதி முதல் அம்மாநிலத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.