பீகாரில் ரயில் நிலைய நடைபாதையில் இறந்த தாயை எழுப்ப முயன்ற, ஒரு வயது குழந்தைக்கு நடிகர் ஷாரூக்கான் உதவ முன் வந்துள்ளார்.

முசார்பூர் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் உடல் நல குறைவால் மரணம் அடைந்தார். அவரது ஒரு வயது குழந்தை ஒன்று தாய் இறந்தது கிடப்பதை அறியாமல் அவரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. இது குறித்த வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்தது. தாயின் மரணத்தை கூட அறிய முடியாத குழந்தையின் நிலையை நினைத்து மக்கள் வருத்தம் அடைந்தனர்.
இந்நிலையில், நடிகர் ஷாரூக்கான் அந்த குழந்தைக்கு உதவ முன்வந்துள்ளார். அவர் நடத்தி வரும் மீர் அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், குழந்தை எங்கள் அறக்கட்டளையை வந்து சேர உதவிய அனைவருக்கும் நன்றி .தனது தாத்தாவின் பராமரிப்பில் உள்ள குழந்தைக்கு உதவ நாங்கள் முன் வந்துள்ளோம். என பதிவிடப்பட்டு உள்ளது.