குஜராத், மும்பை மற்றும் டெல்லியில் கொரானா வைரஸ் பரவுவதற்கு அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்துவந்து பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் காரணம் என சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரானா பாதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மகாராஷ்டிராவில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதி்கப்பட்டுல்ளனர், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நோய்த்தொற்று அதிகம் பரவ கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து வந்து நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தியதே காரணம் என சிவசேனா தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக சாம்னா நாளேட்டில் சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டூரையில், கொரானா வைரஸ் குஜராத் மாநிலத்தில் தீவிரமாக பரவுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அழைத்துவந்து மிகப்பெரிய அளவில் மக்களை கூட்டத்தை அழைத்து பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் காரணம் என்று கூறுவதை மறுக்க முடியாது. அதிபர் ட்ரம்ப்புடன் வந்த சில அமெரிக்க அதிகாரிகள் மும்பை, டெல்லிக்கும் சென்று கொரானா வைரஸைப் பரப்பிவி்ட்டார்கள்.
குஜராத்தில் முதன்முதலாக கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் நபர் கொரானாவால் பாதிக்கப்பட்டார் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர், 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரானா வைரஸை மகாராஷ்டிராவில் கட்டுப்படுத்த முடியாததால் உத்தவ் தாக்கரே அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர்ஆட்சியை கொண்டுவர முயற்சித்தால் அது தற்கொலைக்கு சமமான முடிவாகும். எவ்வாறு குடியரசு தலைவர் ஆட்சி இங்கு வந்தது, அகற்றப்பட்டது என்பது 6 மாதங்களுக்கு முன்பு தெரியும்.

கொரானா வைரஸைக் கட்டுப்படுத்த தவறியதால் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதாக இருந்தால் நாட்டில் 17 மாநிலங்களில் குடியரசுத் தலைவர்ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்.
அதில் பாஜக ஆளும் மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு கூட கொரானா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது, எந்த திட்டமிடலும் இல்லை.
மத்திய அரசு கொண்டுவந்த லாக்டவுன் தோல்வி அடைந்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அருமையான ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.