கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து அதிர்ச்சி தரும் தகவலை வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. பலரும் பொழுதுபோக்கிற்காக அல்லது அவசரத் தேவைக்காக கழிவறைக்குச் செல்போன் எடுத்துச் செல்வது சாதாரணமாகிவிட்ட நிலையில், இந்த வழக்கம் மூலநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதீர் குமார், வேலூர் சி.எம்.சி-யில் பயிற்சி பெற்றவர். இவர், “கழிவறையில் ஸ்மார்ட்போன்கள்: நீங்கள் புறக்கணிக்கக்கூடாத மறைந்திருக்கும் சுகாதார அபாயம்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, மலக்குடலில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் மூலநோய் வருவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. கவனச்சிதறல் காரணமாக, கழிப்பறையில் நாம் செலவழிக்கும் நேரம் எதிர்பாராதவிதமாக நீண்டுவிடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘PLOS One’ இதழில் வெளியான “ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் மூலநோய் அபாயம்” என்ற ஆய்வில், பெரியவர்களில் மூன்றில் இருவர் கழிவறைக்கு செல்போன் எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாதவர்களை விட ஐந்து மடங்கு அதிகமாக, அதாவது ஐந்து நிமிடங்களுக்கும் மேல் கழிவறையில் அமர்ந்திருக்க வாய்ப்புள்ளது.
உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்ற மற்ற காரணிகளை கருத்தில் கொண்டாலும், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூலநோய் வரும் அபாயம் 46% அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வு கூறுகிறது. பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீகனெஸ் மருத்துவ மையத்தின் இயக்குநர் டாக்டர் திரிஷா பஸ்ரிச்சா, ஸ்மார்ட்போனுக்கும் மூலநோய்க்கும் உள்ள தொடர்பை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மூலநோய் அபாயத்தைக் குறைக்க, கழிவறை நேரத்தை ஐந்து நிமிடங்களுக்குள் சுருக்கிக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவை உண்பது, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை இந்த நோயை தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.