தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நாளை மறுதினம் முதல் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் அனைத்து வகை பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. எனினும் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்ததால், ரயில்களும் படிப்படியாக இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்தது.
அதன்படி தமிழகத்தில் கடந்த மாதம் முதல் குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அந்த வகையில், திருச்சி-செங்கல்பட்டு , மதுரை- விழுப்புரம், கோவை-காட்பாடி, கோவை-மயிலாடுதுறை , திருச்சி-நாகர்கோவில், கோவை- அரக்கோணம் என 5 வழித்தடங்களில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், சிறப்பு ரயில்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்று நாளை மறுதினம் (29.06.2020) முதல் ஜூலை 15 வரை தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நாளை மறுதினம் முதல் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணம் திரும்பி வழங்கப்படும். எனினும் சென்னை – டெல்லி இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் இயங்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.