சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக, 3,825 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 8,865 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்பட உள்ளன.
இதனால் மொத்தம் 12,690 தேர்வு மையங்களில் 9.7 லட்சம் மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வுப் பணியில் சுமார் 2,21,654 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பணியில் சுமார் 1,65,969 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது.

முன்னதாக, மார்ச் 24 அன்று நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வுகளை எழுத இயலாத மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 18 அன்று ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களிலேயே தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிறப்பு பேருந்தில் ஆசிரியர் உள்ளிட்டோரும் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் செல்லும்போது ஹால்டிக்கெட், அடையாள அட்டைகளை காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது