காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் 4-வது நாளான நேற்று, மகளிர் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான ஜூடோ இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் மைக்கேலா வொயிட்பூய்-ஐ இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் எதிர்கொண்டார். இதில், தோல்வியடைந்த சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 2014ஆம் ஆண்டு போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் வென்ற அவர், காமன்வெல்த்தில் ஜூடோ போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இதேபோல, ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவினருக்கான ஜூடோ போட்டியில், விஜய்குமார் யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மகளிர் 71 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதலில், இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் ஒட்டுமொத்தமாக 212 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்தியா ஒட்டுமொத்தமாக 9 பதக்கங்களுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பேட்மிண்டன் கலப்பு அணி பிரிவில் சிங்கப்பூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதன்மூலம், வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்குவாஷ் போட்டியில் ஸ்காட்லாந்து வீரரை வீழ்த்திய சவ்ரவ் கோஷல் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆடவருக்கான ஹாக்கிப் போட்டியில், இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, 4-4 என்ற கணக்கில் டிரா செய்தது.
இதனிடையே, மகளிர் பிரிவில் 4 பேர் கொண்ட அணிகளுக்கான லான் பவுல் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி, 16-13 என வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய மகளிர் அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. 1930-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் இப்போட்டியில் இந்தியா பதக்கம் ஏதும் வென்றதில்லை. இதனால், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்து இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.