கொடூரச் செயலுக்கு துணை நின்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க, சட்ட ரீதியாக திமுக துணை நிற்கும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “ சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரையும், காவல்துறையினர் தாக்கி, லத்தியை பின்புறம் திணித்து, முடிகளை பிய்த்தெறிந்து உயிர் பறித்ததை கண்டு தமிழகமே பதறுகிறது.
காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள, பழனிசாமி தலைமையிலான அரசு அனுமதித்தன் விளைவு தான் இந்த பெருங்கொடூரம். கொடூரச் செயலுக்கு துணை நின்றவர்களுக்கு, கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில், சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும்.
இரு உயிர்களை பறிகொடுத்து,3 பெண் பிள்ளைகளுடன் வேதனையில் வெந்துகொண்டிருக்கும், அம்மையார் செல்வராணி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி திமுக சார்பில் அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.