முதலமைச்சராக நீடிக்க தகுதி இழந்த பழனிசாமி, போலீஸ் துறையை வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “ சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு சென்ற நீதிபதி, உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் அளித்துள்ள அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. அதில் ‘கூடுதல் டிஎஸ்.பி மிரட்டும் பார்வையுடனும், உடல் அசைவுகளுடனும் நின்றார். சிசிடிவி பதிவுகள், தினமும் அழிந்துபோகும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பவ தினத்தின் காணொளிப் பதிவுகள் அழிக்கப்பட்டு இருந்தன. விடிய, விடிய லத்தியால் அடிக்கப்பட்டு – லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளது. காவலர் மகாராஜன் ‘உன்னால ஒன்னும் புடுங்க முடியாது’ என்று ஒருமையில் பேசினார்’ என்று மாஜிஸ்திரேட் குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் துறை அமைச்சரான முதல்வருக்கு தெரியாமல் தான் நடந்தனவா..? இருவரும் ‘உடல்நலக்குறைவு’, மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக முதல்வர் கூறியதன் பின்னணி என்ன..?
கொலைகளை மறைக்க முதல்வரும் இணைந்து செயல்பட்டாரா..? வரலாற்றில் முதன்முறையாக வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் காவல்நிலையம் மாற்றப்பட்டுள்ளது. ஒரு காவல்நிலையத்தை கூட நிர்வகிக்க முடியாமல், உண்மையை மறைத்த பழனிசாமி, முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.

பதவியை விட்டு செல்ல மனமில்லை என்றால், போலீஸ் துறையை வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டும். கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்வதோடு, மறைக்க துணை போனவர்களையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.. அப்பாவிகளாக காவல்நிலையத்திற்கு வந்து, பிரேதங்களாக அனுப்பப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.