கொரோனாவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாக பொய்யான மகுடம் சூட்டிக் கொள்ளாதீர்கள் என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ‘முதலமைச்சருக்கு கடைசி எச்சரிக்கை’ என்ற பெயரில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “ கொரோனா தொற்று ஓரிருவருக்கு பரவத் தொடங்கியதில் இருந்து, நோய்த் தொற்று எப்படி கட்டுப்படுத்துவது, நோய் வந்தவர்களை காப்பாற்றவும் பல்வேறு ஆலோசனைகள் கூறி வந்தேன். ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் சொல்லி வந்தேன். இதை எதையுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்யவும் இல்லை, கேட்கவும் இல்லை.
இதனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது. சமூக பரவல் ஆகிவிட்டது என்று மருத்துவர்கள் கூறும் நிலையில், முதல்வர் சமூக பரவல் ஏற்படவில்லை என்று கூறுகிறார். என்னுடைய ஆலோசனை மட்டுமல்ல, வேறு யார் கூறுவதையும் கேட்கும் மனநிலையில் முதலமைச்சர் இல்லை. அதனால் தான் தமிழ்நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்க வேண்டியது. ஒட்டுமொத்த பேரழிவிற்கு ஒரே ஒரு ஆள் காரணம் என்றால் அது, முதல்வர் பழனிசாமி மட்டுமே.
சென்னையில் கொரோனா பரவியதற்கு, மக்கள் நெருக்கமாக வாழ்கின்றனர் என்று மக்கள் மீது குறை கூறுகிறார். கொரோனா வராது என்றார், பணக்காரர்களுக்கு மட்டும் தான் வரும் என்றார்.. 3 நாட்களில் கொரோனா ஒழிந்துவிடும் என்றார்.. இப்போது 3 மாதமாகியும் கொரோனாவை ஒழிக்க முடியாததால், ஆண்டவனுக்கு தான் தெரியும் என்று கூறுகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய படுகொலையை எடப்பாடி அரசு செய்துள்ளது. முதலில் 13 பேரை சுட்டே கொன்ற இந்த அரசு, இப்போ 2 பேரை அடித்தே கொன்றுள்ளனர். இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால், திமுக மீது பழி போடுகிறார் பழனிசாமி. நோயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.
எடப்பாடி அரசின் ஊழலை வைத்து அரசியல் செய்ய முடியும். முதலமைச்சர் பதவியை வைத்து மக்களுக்கு எதையும் செய்ய தகுதியில்லாதவர் தான் முதல்வர் பழனிசாமி. கொரோனா ஒழித்துவிட்டு அதற்கான சாதனை பட்டத்தை சூட்டிக் கொள்ளுங்கள்.. கொரோனாவே ஒழியாத நிலையில் ஒழித்துவிட்டதாக பொய்யான மகுடம் சூட்டிக் கொள்ளாதீர்கள்..” என்று பேசியுள்ளார்.