புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும், கால்நடையாகவே வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருக்கின்றனர். இதில் பலர் உணவு இன்றியும், சாலை விபத்துக்களில் சிக்கியும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கியது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநிலங்களுக்கு வந்தடைந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பட்டியலை தயார் செய்வதோடு ஊரடங்குக்கு முன்பு அவர்கள் என்ன வேலை பார்த்தார்கள் என்பதை குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்கு வந்தடைந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்தவும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களின் விவரங்களை தாக்கல் செய்யவும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறியதாக புலம்பெயர் தொழிலாளர்கள் மேல் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.