கோவை சூலூரில் இருச்சக்கர வாகனத்தை திருடிய இளைஞர் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வாகனத்தை அதன் உரிமையாளருக்கு பார்சலில் அனுப்பி வைத்து இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார், 34. இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சுரேஷ் தனது பைக்கை ஒர்க்ஷாப் முன்பு நிறுத்தி சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது தனது காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்து பார்த்தார். அதில் வாலிபர் ஒருவர் பைக்கை ஓட்டிச் சென்றது பதிவாகி இருந்தது. இதனால் தனது பைக் திருடப்பட்டதை உறுதிப்படுத்திய சுரேஷ், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர் அப்பகுதியில் டீ மாஸ்டராக இருந்தது தெரியவந்தது. ஆனால் அவரைப் பற்றிய வேறு எந்த தகவல்களும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று (மே 30) சூலூர் கூரியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், அவரது பெயருக்கு கூரியர் வந்துள்ளதாக கூறியதால், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது தொலைந்து போன பைக் அங்கு இருந்துள்ளது. இதில், ஆச்சரியம் அடைந்த சுரேஷ் குமார் கூரியர் பணம் செலுத்தி பைக்கை பெற்றுக் கொண்டு வந்தார். ஊரடங்கின் போது சொந்த ஊருக்கு செல்வதற்காக டீ கடை மாஸ்டர் இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.