பெங்களூருவில் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்ந்ததால், அங்கு அமலில் உள்ள ஊரடங்கை கடுமையாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பெங்களூருவில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என முதல்வர் அறிவுறித்தினார்.
பெங்களூருவில் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சித்தபுரா, விவி புரம், கே.ஆர் மார்கெட் உள்ளிட்ட 30 பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தெருக்களை சீல் வைக்கவும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது தேவைப்பட்டால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் கொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. சமூக நலக் கூடங்கள் மற்றும் அரசு தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு உரிய வசதி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவிறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, வருவாய் அமைச்சர் அசோகா, உள்துறை அமைச்சர் பஸவராஜா பொம்மை, தலைமை செயலாளர் டி,எம் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கர்நாடகாவில் மொத்தம் 9,150 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், பெங்களூருவில் 1,272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்த நிலையில், ஊரடங்கை கடுமையாக்கி அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.