வெயில் கால தொற்றுகள்…! ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? கர்ப்பிணிகள் இதையெல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க…!

கோடைக்காலம் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். வெயில், புழுக்கம், வியர்வை என ஒவ்வொரு நாளையும் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிடுவிகிறது. இந்த நாட்களில் சாதாரண நபர்களைவிட கர்ப்பிணி பெண்களுக்கு பிரச்னைகள் அதிகம்.

இந்த கோடைக்காலத்தில் கர்ப்பிணிகள் தங்களுக்கு வெயிலினால் ஏற்படக்கூடிய தொற்றுகள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் என்னென்ன? அதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கருப்பைவாய் பகுதியில் தொற்று: கர்ப்பக் காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதில் முக்கியமானவை சிறுநீர்ப் பாதை தொற்று மற்றும் கருப்பைவாய் பகுதியில் தொற்று.சாதாரணமாகவே கர்ப்ப காலத்தில் கருப்பைவாய் பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும். கோடைக்காலத்தில் புழுக்கம் மற்றும் வியர்வையினால் அதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கோடையில் கர்ப்பிணிகள் ஒருநாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் வலி, எரிச்சல் உணர்வு தோன்றினால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.

மேலும், கருப்பை வாய்ப் பகுதியில் அரிப்பு, அதிக வெள்ளைப்படுதல், துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கோடையில் நீர்ச்சத்துள்ள தர்பூசணி, திராட்சை போன்ற பழங்கள், மஞ்சள் பூசணிக்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவைதவிர, பச்சைக் காய்கறிகள், கீரையையும் சேர்த்துக்கொள்ளவது அவசியம். கோடைக்காலத்தில் ஆடைகள் விஷயத்திலும் கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பருத்தி போன்ற காற்றோட்டமான ஆடைகளைத் தேர்வுசெய்து அணிய வேண்டும். உள்ளாடைகளையும் பருத்தியில் தேர்ந்தெடுத்து அணிவதால் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

கர்ப்பிணிகள் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? கர்ப்பிணிகள் குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. தாய் உட்கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் மட்டுமே குழந்தைக்கு செல்கிறது. அம்மா சாப்பிடும் உணவு அப்படியே குழந்தைக்குச் செல்லாது என்பதை கர்ப்பிணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், கர்ப்பிணிகள் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் பலருக்கு ஏற்படுகிறது. ஐஸ்கிரீமில் சர்க்கரை அதிகமாக இருக்கும், ஊட்டச்சத்துகள் எதுவும் கிடையாது. அதனால் அடிக்கடி எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எப்போதாவது ஒருமுறை ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் தவறில்லை.

காலை நேரத்தில் சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்து, உடலுக்குப் போதுமானது என்பதால், காலை 7 முதல் 8 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் சீக்கிரமாக நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டுவிடும் என்பதால், மதிய வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளியே செல்ல நேர்ந்தால் கையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச்செல்ல வேண்டும். சூரியனின் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடையைப் பயன்படுத்தலாம். மேலும் கோடையில் ஏற்படும் புழுக்கத்தால் உறக்கம் பாதிக்கப்படலாம். அதனால் இரவு உறங்கச்செல்வதற்கு முன்பாக குளிக்கலாம். அல்லது எளிய மசாஜ் செய்துவிட்டுப் படுத்தால் நன்றாக உறக்கம் வரும்.

பாலூட்டும் தாய்மார் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்:
குழந்தை பிறந்த இளம் தாய்மார்களும் கோடைக்காலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பாலில் அதிகம் இருப்பது, நீர்ச்சத்துதான். அதனால் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். கோடைக்காலத்தில் இன்னும் கூடுதலாக எடுத்துக்கொள்வது நல்லது.
குழந்தை பிறந்த உடன் தாய்மார்களுக்கு உணவு விஷயத்தில் பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். அது தேவையற்றது. எப்போதும் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அதிக பழங்கள், காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Read More: மீண்டும் ஜெயம் ரவி விலகலா? ஜெயம் ரவிக்கு பதில் நடிக்க இருக்கும் பிரபலம் யார்…

Baskar

Next Post

மனித இனம் அழியும் அபாயம்!… நிலவில் 275 மொழிகளை பாதுகாக்க விஞ்ஞானிகள் திட்டம்!

Fri May 10 , 2024
275 Languages: பூமியில் மனிதர்களின் உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டால், மனித வரலாற்றின் ஒரு பகுதியை காப்பாற்றும் முயற்சியாக நிலவில் 275 மொழிகளை பாதுகாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நிலவில் மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க அம்சத்தைப் பாதுகாக்கும் முயற்சியில், விண்வெளியில் மனிதர்களின் இருப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஜப்பானிய சந்திர ஆய்வு நிறுவனமான ஐஸ்பேஸ், அதன் வரவிருக்கும் ஹகுடோ-ஆர் மிஷன் 2 க்கு யுனெஸ்கோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது, இது ஒரு ரோபோ லேண்டரை சந்திர […]

You May Like