சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் இறப்புக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளமான ட்விட்டரிலும் #சாத்தான்குளம், #JusticeForJeyarajAndFenix போன்ற ஹேஷ்டாகுகள் கடந்த 4 நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் “ 2 அப்பாவி வணிகர்களை, 2 எஸ்.ஐ, 2 தலைமை கான்ஸ்டெபிள், 4 கான்ஸ்டெபிள் என 9 பேர் சேர்ந்து அடித்தே கொன்றுள்ளனர். மற்றவர்கள் கொலை செய்தால், அவர்களை கைது செய்து அவர்கள் மீது 302 பிரிவின் வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால் 2 பேரை அடித்தே கொன்ற போலீசாருக்கு ஆயுதப் படைக்கு மாற்றுவீர்களா..? போலீஸ் அடித்து கொலை செய்தால் ஆயுத படைக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பில் ஏதாவது சட்டம் உள்ளதா..?
பொதுமக்களை அடித்து, லாக் அப் மரணமடைந்தால் பணியிட மாற்றம் செய்வது சட்ட விரோதம்.. உடனடியாக அந்த காவலர்கள் மீது எஃப்.ஐ. ஆர் பதிவு செய்து, 302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்..
அவர்களை சஸ்பெஸ்ட் செய்து, அவர்கள் போலீஸ் வேலைக்கு தகுதியற்றவர்கள் என்று பணிநீக்கம் செய்ய வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்ற தமிழ் வழக்கறிஞர் சங்கம் கேட்டுக் கொள்கிறது” என்று பேசியுள்ளார்.