பாலிவுட் நடிகர் சுஷாந்தின் சிங் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது அண்ணியும், இன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். கடந்த 6 மாதமாகவே சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் மற்றும் விளையாட்டு பிரபலங்களும் சுஷாந்த் சிங்கிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சுஷாந்தின் வீடியோக்களும் சமூக வலைதளஙக்ளில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுஷாந்தின் இறுதி சடங்கு மும்பையில் நடைபெற்ற போது, அவரின் சொந்த ஊரான பீகாரில் வசித்து வரும் அவரின் அண்ணி உயிரிழந்துள்ளார். சுஷாந்தின் இறப்பு செய்தியை கேட்டதில் இருந்தே அவர் உணவருந்தாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது அண்ணியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kai Po Che! என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சுஷாந்த், சுதேசி ரொமேன்ஸ், பி.கே, கேதர்நாத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். MS தோனி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனி கதாப்பாத்திரத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சிச்சோர் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அவர் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படம் கடந்த மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோன ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.