தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த கொரோனாவின் பிடியில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் உலகநாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் கூட, இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ இன்று மட்டும் புதிதாக 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246-ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 141 பேருக்கு இன்று தொற்று உறுதியாகி உள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 618 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், சென்னை பாதிப்பு எண்ணிக்கை 13, 362-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,313 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 154-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8,776 பேர் மருத்துவமனையில் கொரொனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.