பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறவுள்ளன. இத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பள்ளிகளை திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கள் கேட்கப்படும். அதனடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 210 நாள்கள் பள்ளிகள் இயங்கினால்தான் அனைத்து பாடங்களையும் ஆசிரியர்களால் முழுமையாக நடத்தி முடிக்க முடியும். ஆனால், தற்போதைய சூழலில், நடப்பு கல்வியாண்டில் (2020-21) பள்ளிகளை திறப்பது தாமதமாகி வருவதால், பாடங்களை முடிப்பதில் ஆசிரியர்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆராய, 16 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.