தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரானா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 5-ம் கட்ட ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிடபோது, 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது.
இதைதொடர்ந்து, கொரானா தொற்றின் நிலையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள சமய வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அவ்வாறு திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துக்களை பெற கடந்த 3-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் சமயதலைவர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என அனைத்து மத தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால், நாளை 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தப்படி, தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. நோய் தொற்று குறையாத காரணத்தால் அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது