கொரோனா இறப்பு எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக, பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதற்கு முன்பு சராசரியாக தினமும் 1000 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ நெருங்குகிறது. குறிப்பாக, சென்னையில் தினமும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மொத்த பாதிப்பில் 70% சென்னையில் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பலர் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் இடம் இல்லாததால், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் அரசின் தனிமைப்படுத்தப்படும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

அப்படி தனிமை சிகிச்சையில் இருப்பவர்களில் பலருக்கு, திடீரென்று மூச்சுதிணறல் ஏற்படுவதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்பின்னர், சில மணிநேரங்களில் அவர்கள் உயிரிழந்து விடுகின்றனர். மேலும் சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இறந்துவிடுகின்றனர். அந்த வகையில், சென்னையில் தினமும் 20க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் ஆகிய மருத்துவமனைகளில் தினமும் 20க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் ஏற்படுவதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி சென்னையில் ஏற்படும் கொரோனா மரணங்களை அரசு மறைப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 3-ல் 1 பங்கு எண்ணிக்கையை மட்டுமே அரசு வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின், இதுகுறித்து அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். 50 சதவீதம் கொரோனா மரணங்களை, அ.தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மறைத்து விட்டனர் என்று நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது என்று கூறிய அவர், மரணம் அடைந்தோரின் எண்ணிக்கையை, சரி பாதியாகக் குறைத்து வெளியிட்டு – மிகப்பெரிய துரோகத்தை – மன்னிக்க முடியாத குற்றத்தை அதிமுக அரசு செய்திருப்பதை கண்டிப்பாதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா மரணங்களை அரசு மறைப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார். மேலும் பேசிய அவர் “ அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்படுகிறது. இறப்பை யாராலும் மறைக்க முடியாது. இறப்பு விவரங்களை எப்படி குறைத்துக் காட்ட முடியும்..?
கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தால், அத்தனை மக்களுக்கும் தெரிந்துவிடும். இதை மறைக்கவே முடியாது. இதனால் அரசுக்கு எந்த நன்மையும் கிடையாது. இதில் வெளிப்படை தன்மை உள்ளது. தினந்தோறும் நாங்கள் அறிவிக்கிறோம். எனவே இதில் ஒளிவு மறைவு இல்லை” என்று தெரிவித்தார்.

கொரோனா மரணங்களை மறைக்க முடியாது என்று முதலமைச்சர் கூறியுள்ள நிலையில், உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இதுதொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியில் பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி “கடந்த மே 26-ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், 50 வயது கொரோனா நோயாளி அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு இருந்த நோய்கள் காரணமாக அவர் 28-ம் தேதி உயிரிழந்தார். ஜூன் 10-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட கொரோனா இறப்பு எண்ணிக்கையில் இந்த உயிரிழப்பு சேர்க்கப்படவில்லை.
இதேபோல் 69 வயதான மற்றொரு கொரோனா நோயாளி ஒருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் மே 26-ம் தேதி சேர்க்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் அவர், கடந்த 31-ம் தேதி உயிரிழந்தார். அவரின் இறப்பு, தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இணைக்கப்படவில்லை.

2 அரசு மருத்துவர்கள், பிணவறை அதிகாரி ஒருவர் என 3 அரசு அதிகாரிகள் இந்த இறப்பு விவரங்களுக்கு கையெழுத்திட்டுள்ளனர் என்பதே சுவாரஸ்யமான செய்தி. எனவே தமிழக அரசு கொரோனா மரணங்கள் எண்ணிக்கையை மறைக்க முயல்கிறதா என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது” அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் கொரோனா சம்மந்தப்பட்ட பிரேக்கிங் நியூஸ்களை தொடர்ந்து ஒளிபரப்பும் தமிழ் செய்தி சேனல்கள், ஏன் இவ்வளவு பெரிய உண்மையை செய்தியாக வெளியிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 1%-க்கு குறைவாகவே இறப்பு விகதம் இருப்பதாக அரசின் புள்ளிவிவரங்ககள் தெரிவிக்கின்றன.
ஆனால் கொரோனா மரணங்களை மறைக்கப்பட்டு, இறப்பு விகிதம் குறைத்து காட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்திலும் நீதிமன்ற தலையீட்டிற்க் பின்னரே அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது.

இது ஒருபுறமிருக்க, மேம்பாலங்களை திறப்பது, ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றி அரசாணை வெளியிடுவது போன்ற செயல்களில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தீவிரத்தை புரிந்துகொள்ளாமல், அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.. இறப்பு எண்ணிகையை யாராலும் மறைக்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ள நிலையில், தற்போது ஆதாரத்துடன் வெளியாகி உள்ள இந்த செய்திக்கு முதல்வர் பதிலளிப்பாரா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.