சென்னை காவல் ஆணையர் எ.கே. விஸ்வநாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக பணி இடமாற்றம் செய்துள்ளது.

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய ஏ.கே. விஸ்வநாதன் தமிழக செயாலகம் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் அவர் சென்னை காவல் ஆணையராகப் பொறுப்பேற்றார். கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவிக்கள் நகர் முழுவதும் அமைக்கப்பட்டன. இதன் மூலம் குற்றங்கள் குறைந்து, குற்றவாளிகள் சிக்குவது அதிகரித்தது. பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத அவர் தற்போது ,செயலாக்கத்துறையின் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில் இருந்த மகேஷ்குமார் அகர்வால் சென்னை மாநகருக்கு புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மண்டல ஐஜியாக இருந்த அமல்ராஜ் சென்னை ஆணையரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்படடுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி டாக்டர் ரவி சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டிஐஜி கண்ணன் ஐஜியாக பதவி உயர்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 டிஐஜிகள் ஐஜியாக பதவி உயர்வு செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். துணை ஆணையர் மயில்வாகனனுக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமிக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் இணை ஆணையராக சென்னை வடக்குக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.