
புதுக்கோட்டை: நிவாரணம் மட்டும் வாங்குகீறிங்க, ஆனா ஓட்டு மட்டும் மாத்திப்போடுவது ஏன் என விராலிமலை தொகுதியில் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணியாற்றிய பெண்களிடம் வீடியோ காலின் மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய உரையாடல் வைரலாகி வருகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில் அவருடைய தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை எப்போதும் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாகவே அவர்களுக்கு அரிசி மூட்டைகள், மளிகைப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கிவருகிறார். சென்னையில் இருந்தாலும் சரியாக கிராமப்புற மக்களுக்கு சென்றடையும் வகையில் பணிகளை மேற்கொண்டுவருகிறார் விஜயபாஸ்கர்.

மேலும் தொகுதியில் உள்ள கட்சியினர் உதவியுடன், கிராம மக்களிடையே வீடியோ காலில் பேசிவதோடு நிவாரணப்பொருட்கள் கிடைத்துவிட்டதா? என விசாரிப்பாராம். அதே போன்று தான் விராலிமலைத்தொகுதிக்குட்பட் தேராவூர் ஊராட்சி பொதுமக்களிடம் அமைச்சர் வாட்ஸ் அப் வீடியோ கால் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இக்கிராமத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில் பணியில் ஈடுபட்டுவரும் பெண்களிடம் பேசிய அமைச்சர், பணிகள் எப்படி போகுது? கொடுக்கும் நிவாரணம் எல்லாம் கிடைச்சதா என அமைச்சர் கேட்டார். அதற்கு ஏற்கனவே அரிசி, கோதுமை, காய்கறிகள் கிடைத்துவிட்டது எனவும் மேலும் பல அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதாக கூறினார்கள்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், நீங்க கஷ்டப்படும் நேரத்தில் எல்லாம் நிவாரணம் கொடுத்து உதவுறோம். ஆனா நீங்க ஜோதிமணிக்கு தான் ஓட்டுப்போறீங்கன்னும், வேற யாருக்கு ஓட்டுப்போடுவீங்கன்னும் கேட்டார். உடனே வீடியோ காலில் அவரை பார்த்தப்படியே மக்கள் எப்பவும் அமைச்சருக்கு தான் எங்கள் ஓட்டு என்றனர்.
கொரோனாவில நாங்க கஷ்டப்பட்டு இருக்கிறோம், தப்பிச்சு இருக்கமான்னு கூட பார்க்க வரல ஜோதிமணி. உங்களுக்குத்தான் எப்பவும் ஓட்டுப் போடுவோம். நீங்கதான் மீண்டும் அமைச்சராக வரணும். எங்களுக்கு நிறைய செய்யணும் என்கின்றனர் மக்கள். இறுதியாக எல்லாத்தையும் கேட்டுக்கொண்ட அமைச்சர், `ஓட்டுப் போடவேண்டும் என்பதற்காக, நான் நிவாரணம் கொடுக்கவில்லை. நீங்க கஷ்டப்படுவதால் மட்டும் தான் கொடுக்கிறேன்என வீடியோ கால் உரையாடலை முடிவு செய்கிறார்.