வாசனை, சுவை தெரியவில்லை எனில் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. மனித உயிரை கொன்று குவித்து வரும் இந்த நோய்க்கு இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதுதொடர்பாக பல்வேறு ஆய்வுப் பணிகளும் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நோய் தாக்கத்தின் அறிகுறிகளாக தொண்டை புண், சளி, இருமல், அதிகப்படியான உடல் வெப்பநிலை கொண்டிருக்கும் காய்ச்சல் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக எச்சரிக்கப்பட்டது. தற்போது இவைதான் பிரதான அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. எனினும் இந்த வரிசையில் உலர்ந்த தொண்டையும், தலைவலியும் வயிற்றுபோக்கு பாதிப்புகளும் கூட இத்தொற்று இருந்தவருக்கு ஏற்பட்டது. சமீப நாட்களாகவே எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்றுக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது இவர்களுக்கு வாசனை உணர்வும் சுவை உணர்வும் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அறிகுறிகளில் தற்போது இவையும் சேர்ந்திருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த காது, தொண்டை நோயின் அகாடமி தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கிய அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு பொருள்களின் மணமும், சுவைத்தால் நாக்கில் சுவை தெரியாமலும் இருக்கும் அறிகுறியும் தென்படும் என்றும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது,
காய்ச்சல்
இருமல்
உடல் சோர்வு
மூச்சுத் திணறல்
தசை வலி (myalgia)
மூக்கு அடைப்பு (Rhinorrhea)
தொண்டை வலி( sore throat)
வயிற்றுப்போக்கு( diarrhea)
சளி(expectoration)
வாசனை இழப்பு (anosmia)
சுவை இழப்பு(ageusia) ஆகியவை கொரோனா அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.