சீன – இந்திய எல்லை விவகாரத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு மக்களிடம் கூற வேண்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 5 மற்றும் 6 தேதிகளில் லடாக்கில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதில் இருந்து, இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது. அதன் பின்னர், இந்திய எல்லைக்குட்பட்ட லடாக்கில் உள்ள பாங்காய் ஏரியில் படகுகளில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியதாகவும், சீன ஹெலிகாப்டர்கள் இந்திய பகுதிகள் பறந்ததாகவும் பல தகவல்கள் வெளியாகின.
மேலும் பாங்கோங் ஏரியில் இருந்து 200 கி.மீ தொலைவில் சீனா விமானப்படை தளத்தை கட்டி வருவதாகவும் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு படை தளபதி பிபின்ராவத் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து எல்லை பிரச்சனை குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ சீனாவுடனான எல்லை விவகாரத்தில் அரசின் மௌனம், இந்த இக்கட்டான நேரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதோடு, நிச்சயமற்ற சூழலையும் உருவாக்குகிறது. என்ன நடக்கிறது என்பதை அரசு தெளிவாக இந்திய மக்களிடம் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சீன – இந்தியா விவகாரத்தில் மத்தியஸ்டம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், சீன எல்லை விவகாரத்தில் மோடி அதிருப்தியில் உள்ளதாகவும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் சீன விவகாரத்தில் மோடி – ட்ரம்ப் இடையே எந்த உரையாடலும் நடைபெறவில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.